×

ஒடுகத்தூர் சுகாதார நிலையத்தில் விஷமுறிவு மருந்து இல்லாததால் பாம்பு கடித்த பெண் சாவு

அணைக்கட்டு: ஒடுகத்தூர் சுகாதார நிலையத்தில் விஷமுறிவு மருந்து இல்லாததால் பாம்பு கடிக்கு சிகிச்சை கிடைக்காமல் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த வண்ணாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கல்யாணி(42), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் கல்யாணி தனது நிலத்தில் கட்டியிருந்த  மாட்டை ஓட்டி வரச்சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் கல்யாணியை மீட்டு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்த டாக்டர்கள், பாம்பு கடி விஷமுறிவுக்கான மருந்து இல்லை எனக்கூறி வேலூருக்கு அழைத்துச்செல்லும்படி தெரிவித்தனர். ஆனால், கல்யாணியின் உறவினர்கள், அதுவரை முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தனர்.

ஆனால், உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லையாம். இதற்கிடையில் கல்யாணி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் விஷமுறிவு மருந்து இல்லாததாலும், முதலுதவி சிகிச்ைச அளிக்காததாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் கூறி வேதனையுடன் கல்யாணியின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: இங்கு கூலித்தொழிலாளிகள், விவசாயிகள், மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாய பணிகளில் ஈடுபடும்போது பாம்பு, விஷப்பூச்சி கடிகளுக்கு ஆளாகிறோம்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஒடுகத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றால் விஷமுறிவு மருந்து, முதலுதவி மருந்து கிடையாது எனக்கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அங்கு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும், உடனடியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. மேலும் இரவு நேர டாக்டர்கள் இருப்பதில்லை. மருந்துகள்  இருப்பதில்லை. எனவே, கிராமப்புற மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைத்து இரவு பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Poisonous drug
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே தேவம்பட்டு...